பாரம்பரிய விதைகளை மீட்டெடுத்து காக்கும் வகையில் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை விவசாயிகள் நலத்துறை, ஆத்மா அமைப்பு, நெல் ஜெயராமன் தன்னார்வ அமைப்பு ஆகியவற்றின் சார்பாக காரைக்காலில் முதல்முறையாக நெல் திருவிழா நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மேலும், நெல் திருவிழாவில் நடைபெற்ற, கருத்தரங்கில் நவீன வேளாண் முறைகள், வேளாண் தொழில்நுட்பங்கள், பாரம்பரிய நெல் சாகுபடி முறைகள் உள்ளிட்ட வேளாண்மை சார்ந்த பல்வேறு தகவல்களை வேளாண் வல்லுநர்கள் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறியதோடு, விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கங்களை அளித்தனர். விழாவில் ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் வழங்கப்பட்டன.
வேளாண் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய விவசாயம் சார்ந்த கண்காட்சியில் 174 பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பழமையான நெல் வகைகளுக்கு விவசாயிகள் திரும்பினால் மட்டுமே நோய் நொடி இன்றி வாழ முடியும் என்றும், ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களையும், தொழு உரங்களையும் பயன்படுத்த அனைத்து விவசாயிகளும் முன்வர வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும், அதனைத் தொடர்ந்து பேசிய விவாசாயிகள், 'விவசாய வல்லுநர்கள் நேரடியாக வயல்வெளிகளுக்கு வந்து, இயற்கை உரம் தயாரிப்பது குறித்து நேரடியாக விவசாயிகளுக்கு பயிற்சி தர வேண்டும்' என்று புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.