முஸ்லீம் கணவர்கள் தங்கள் மனைவியிடம் தலாக் என மூன்று முறை கூறி விவாகரத்து செய்வதைத் தடை செய்யும், முத்தலாக் தடை மசோதா மோடியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. அப்போது அந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் முடங்கியது. இருந்தும் மத்திய அரசு அவசர சட்டமாக கொண்டுவந்தது.
இந்நிலையில் முத்தலாக் தடை மசோதா காலவதியானதை அடுத்து, மீண்டும் இன்று மக்களவையில் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த மசோதாவின் மீதான விவதாததில் பேசிய சிதம்பரம் தொகுதி எம்.பி தொல்.திருமாவளவன், இந்து பெண்களுக்கு ஒரு சட்டம், முஸ்லீம் குடும்பத்திற்கு ஒரு சட்டமா? என கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய அவர், முஸ்லீம் ஆண்களுக்கு எதிராக செயல்படுவதற்குத்தான் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் இது இஸ்லாமிய குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய கரூர் எம்.பி ஜோதிமணி, ’முஸ்லீம் பெண்களுக்கு போலவே, இந்து பெண்களுக்கும் இந்த சட்டத்தை கொண்டு வர வழிவகை செய்யவேண்டும். இந்த சட்டத்தை மத்திய அரசு அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை நிரூபிக்க கொண்டு வந்துள்ளது’ என்றார்.
நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ் பேசுகையில், ’இந்த மசோதாவின் மூலம் முஸ்லீம் சிறுபான்மை மக்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது’ என விமர்சனம் செய்தார்.
இவரைத் தொடர்ந்து பேசிய தேனி எம்.பி ரவீந்திரநாத், ‘மசோதாவின் மூலம் பெண்களுக்கு இந்த அரசு சுதந்திரத்தை கொடுக்கிறது. அதனால் இந்த மசோதாவை அனைத்து பெண்களுக்கும் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டும்’ என்றார்.