தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தையும், மகனும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தனர். இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விசாரித்து வணிகர்களின் மரணத்தில் கொலைக்கான முகாந்திரம் உள்ளது என தெரிவித்தது.
ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'உயிரிழந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் காவலர்களின் தாக்குதலால் உயிரிழக்கவில்லை; அவர்கள் உடல்நலக் கோளாறு காரணமாகவே உயிரிழந்தனர்' என அறிக்கை வெளியிட்டார். இவ்வாறு அறிக்கைவிட்ட பின்பு எடப்பாடி பழனிசாமி மாநில உள்துறை அமைச்சராக தொடர்வது பொறுத்தமற்றது என தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் நடராஜன் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் காவல் நிலைய மரணங்களுக்கு சில நாட்களுக்குப் பின்பு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயராஜ், வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட நோயாலும், பென்னிக்ஸ் சுவாசக் கோளாறு பிரச்னையாலும் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
இது தொடர்பான விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்பே முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கை பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது அறிக்கை, ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்டதை மறுக்கிறது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, எதிர்க்கட்சிகள், பொதுமக்கள், சர்வேதச சமூகம் இது குறித்து அதிகம் பேசியதையடுத்து சிபிசிஐடி காவலர்கள், ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்தில் தொடர்புடைய ஐந்து காவலர்களை கைது செய்தனர்.
முதலமைச்சரின் அறிக்கை குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பாதுகாப்பது போல் தெரிகிறது. எனவே, இது தொடர்பான விசாரணை முடியும் வரை மாநில உள்துறை முதலமைச்சர் பழனிசாமி வசம் இருக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்". இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு