கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கரை ஆளுநர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வலியுறுத்தியுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்தக் கடிதத்தில், “மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கரின் செயல்பாடுகளை பட்டியலிட்டு, இது போன்று பல்வேறு அரசியல் விதிமீறல்களில் ஈடுபட்டுவருகிறார்.
ஆகவே ஆளுநரை பதவியை விட்டு நீக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. சுவேந்து சேகர் ராய், “மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கரை திரும்ப பெறுமாறு நாங்கள் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி உள்ளோம்.
ஆளுநர் ஜகதீப் தங்கர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாநிலத்திற்கு வந்தார். அன்றிலிருந்து, தொடர்ந்து ட்வீட் செய்கிறார், பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்துகிறார் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றார்.
அங்கு மாநில அரசு, அலுவலர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர்களின் நடத்தை குறித்து விமர்சிக்கிறார். இதெல்லாம் இந்திய அரசியலமைப்பு சட்டங்களை மீறுவதாகும்.
கடந்த 75 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் இவ்வாறு நடந்ததில்லை. ஆளுநர் ஏதாவது கூற வேண்டுமானால், சட்டத்திற்கு உள்பட்டு கூற வேண்டும். மாறாக செய்தியாளர்கள் சந்திப்பு நடத்துவது அல்ல.
அண்மையில் அவர் கூறிய கருத்துகளுக்காக முதலமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மாநில அரசின் ஆட்சி அதிகாரத்தில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஆளுநரின் இத்தகைய நடவடிக்கைகள் கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளுக்கு எதிரானது” என்றார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், சுதிப் பாண்டியோபாத்யாய், ககோலி கோஷ் தஸ்திதர், டெரிக் ஓ பிரையன் மற்றும் ராய் உட்பட இரு அவைகளிலும் உள்ள ஐந்து மூத்தக் கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்டனர்.
இது குறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா பதிலளிக்கையில், “மாநில அரசு தனது கடமையை சரியாகச் செய்யவில்லை. இதனை, கண்டறிந்ததால் ஆளுநர் தனது அரசியலமைப்பு கடமையைச் செய்கிறார்” என்றார்.
ஆளுநரை பதவி நீக்கம் கோரிய கடிதம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “இவ்விஷயத்தில் ஆளுநர் மீது குடியரசுத் தலைவர் எடுக்கும் நடவடிக்கை குறித்து தெரியவில்லை. அரசியலமைப்பின் மாநிலத் தலைவராக ஆளுநர் உள்ளார். திரிணாமுல் காங்கிரஸின் இந்தச் செயல்பாடு அவர்களின் பயத்தை காட்டுகிறது” என்றார்.
இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் மகா கூட்டணிக்கு தேஜஸ்வி யாதவ் அழைப்பு!