ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதி கோயில் இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று. இக்கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் வருவது வழக்கம். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதுமுள்ள கோயில்கள் மார்ச் இறுதி வாரம் முதல் மூடப்பட்டன. அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலும் கரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டது.
இந்நிலையில், ஜூன் 8ஆம் தேதி முதல் நாடு முழுவதுமுள்ள வழிபாட்டுதலங்களை திறக்க மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்பிறகு திருமலை திருப்பதி கோயிலும் கடந்த சில நாள்களுக்கு முன் திறக்கப்பட்டது. முதல் மூன்று நாள்களுக்கு, திருப்பதி தேவஸ்தான ஊழியர்களும், உள்ளூர் மக்களும் மட்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
சுமார் 83 நாள்களுக்கு பின் இன்று முதல் முறையாக வெளிமாவட்ட பக்தர்களும் திருமலை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். 3 ஆயிரம் பேருக்கு திருப்பதி தேவஸ்தானம் அனுமதி வழங்கியது.
அதன்படி ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு, அந்த நேரத்தில் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதுதவிர விஐபி பாஸ்களைப் பயன்படுத்தி இன்று 53 பேர் தரிசனம் செய்துள்ளதாகவும் தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவிந்தா...கோவிந்தா....