திருமலை - திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் தரிசனம் ஜுன் 8-ஆம் தேதியிலிருந்து தரிசனம் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவுலா ரமேஷ் ரெட்டி ஜுன் 3ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது; 'திருமலை திருப்பதி தேவஸ்தான கோயிலில் ஜுன் 8ஆம் தேதி முதல் தரிசனம் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்தது. தற்போது தேவஸ்தான அலுவலர்கள் மாநில அரசின் வழிகாட்டுதலின்படி தயாராக உள்ளனர். மேலும் கோயிலின் நுழைவு வாயில் அனைத்திலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேசமயம் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எங்கே நிற்க வேண்டும், அமர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களை எவ்வாறு கையாள வேண்டும் என தேவஸ்தான அலுவலர்களுக்கு முழு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தேவஸ்தானப் பகுதிகளில் உள்ள கடைளை சுத்தம் செய்ய அதன் உரிமையாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. திருமலை தற்போது பச்சை மண்டலமாக உள்ளது. ஆனால், திருப்பதியில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் சிலர் உள்ளதால், அதன் தாக்கம் திருமலைக்கு வராமல் இருக்க பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.