பிப்ரவரி 1ஆம் தேதி, மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்யவுள்ளார். இந்நிலையில், நிதிநிலை அறிக்கையின் முன்னோட்டமாக கருதப்படும் பொருளாதார ஆய்வறிக்கையை நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல்செய்தார். அதில், செல்வத்தின் சிறப்பை எடுத்துரைக்கும்விதமான 753ஆவது திருக்குறள் இடம்பெற்றுள்ளது.
இடம்பெற்றிருந்த குறள்:
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.
பொருள்:
பொருள் என்று எல்லோராலும் சிறப்பிக்கப்படும் அணையாத விளக்கு, தன்னைப் பெற்றவருக்கு அவர் நினைத்த நாட்டிற்குச் சென்று பகை என்னும் இருளைக் கெடுக்கும்.
மத்திய நிதிநிலை அறிக்கையில் திருக்குறள் இடம்பெறுவது முதல்முறை அல்ல. கடந்தாண்டு, 'பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து'' என்ற திருக்குறளை நிர்மலா சீதாராமன் மேற்கோள்காட்டியிருந்தார்.
இதில், பிணியின்மை என்பது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தையும், விளைவின்பம் என்பது விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்பதையும், ஏமம் என்பது நாட்டின் பாதுகாப்பையும் குறிக்கிறது என விளக்கிப் பேசினார்.