இதுகுறித்து மத்திய திபெத்திய நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "11ஆவது பஞ்சன் லாமா தனது குடும்பத்தாருடன் சீனா அரசாங்கத்தால் கடத்தப்பட்டு 25 வருடங்கள் ஆகின்றது. இளம் வயதில் 11ஆவது பஞ்சன் லாமா கடத்தப்பட்டார். 25 வருடம் என்பது ஒருவரின் வாழ்வில் மூன்றில் ஒரு பங்கு.
கால் நூற்றாண்டாக அவரைச் சிறைப்பிடித்து வைத்திருப்பது ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். பஞ்சன் லாமா கடத்தப்பட்டது அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி மட்டுமல்லாது, ஒட்டுமொத்த திபெத்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. பஞ்சன் லாமாவை விடுவிக்க, தொடர்ச்சியாக குரல் எழுப்பிவரும் அனைவருக்கும் நன்றி.
அவரை விடுவிக்க சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க, ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ளுமாறு சர்வேதச சமூகத்திடம் நாங்கள் வேண்டுகொள் விடுக்கின்றோம். விரைவில் அவர் திரும்பி வருவார் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். அவர் திரும்பும்போது திபெத்தில் அமைதி பிரகாசிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திபெத்திய புத்த மரபில், பஞ்சன் லாமா, தலாய் லாமா ஆகிய இரு பதவிகள் மிக உயர்ந்த பதவிகளாகும். இந்தப் பதவியில் இருக்கும் லாமாக்கள் புத்தரின் மறு அவதாரங்களாகப் பார்க்கப்படுகிறார்கள். லாமாக்கள் உயிரிழக்கும்போது, அதே நேரத்தில் பிறக்கும் ஆண் குழந்தையின் வழியாக மறு பிறப்பு எடுப்பார்கள் என்று திபெத்திய புத்த மரபில் நம்பப்படுகிறது.
தலாய் லாமா கடந்த 1995ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி, 10ஆவது பஞ்சன் லாமாவின் மறுபிறப்பாக 11ஆவது பஞ்சன் லாமாவான கெதுன் சோக்கியி நைமாவை அங்கீகரித்தார். இது நடந்து மூன்று நாள்களுக்குள் 11ஆவது பஞ்சன் லாமா கடத்தப்பட்டார். அப்போது, அவருக்கு வயது ஆறு. 1959ஆம் ஆண்டு தனது தாயகத்தை விட்டு வெளியேறிய தலாய் லாமா, தற்போது வரை இந்தியாவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தலாய்லாமா நியமனத்தில் தலையிடாதீர்கள் - சீன அலுவலர்களை எச்சரிக்கும் அமெரிக்கா