கரோனா வைரஸின் கோரப்பிடியில் இந்தியா சிக்கித் தவிக்கிறது. வேகமாக பரவிவரும் இந்த வைரஸால் நாட்டில் இதுவரை 17,265 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 543 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக, மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 75 பேருக்கு கரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 722ஆக அதிகிரித்துள்ளது.
அதேசமயம், இத்தொற்றால் கிருஷ்ணா, கர்னூல், அனந்தப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததன் மூலம், அதன் மொத்த எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத் துறை அளித்த தகவலின்படி, ”கடந்த 24 மணிநேரத்தில் 2,775 பேரிடம் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 75 பேருக்கு கரோனா இருப்பது தெரியவந்தது. அதிகபட்சமாக சித்தூரில் 25 பேருக்கும், குண்டூரில் 20 பேருக்கும் இத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதேசமயம் 27 நோயாளிகள் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் ஆந்திராவில் இதுவரை 92 பேர் குணமடைந்துள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊடகவியலாளர்கள் 30 பேருக்கு கரோனா உறுதி!