ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் ஜம்மு காஷ்மீர் 370பிரிவு சிறப்பு சட்டத்தை நீக்கம் செய்தது குறித்த விளக்கம் அளிக்கும் கூட்டத்திற்கு ஜன் ஜாங்ரன் சபா ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்தில் மத்திய கால்நடை வளர்ப்பு, மீன்வளத்துறை அமைச்சர் பிரதாப் சந்திரா சாரங்கி, ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் சேக்காவத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது மக்கள் முன்பாக பேசிய அமைச்சர் பிரதாப் சிங் சாரங்கி, பாஜகவை எதிர்க்கும் பல வலுவான எதிர்க்கட்சிகளும் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கு ஆதரவு அளித்தன. ஆனால், காங்கிரஸ் மட்டும் அதை எதிர்த்தது. இந்த நடவடிக்கையை 72 ஆண்டுகளுக்கு முன்பாகவே எடுத்திருக்க வேண்டும்.
இத்தனை ஆண்டுகள் கழித்து காஷ்மீர் மக்களுக்கான சுதந்திரத்தை மோடியின் அரசே வழங்கியுள்ளது. இதனால் தற்போது ஜம்மு காஷ்மீரில் முற்றிலும் அமைதியான நிலை உருவாகியுள்ளது. வந்தே மாதரத்தை ஏற்க முடியாதவர்களுக்கு இந்தியாவில் வாழ்வதற்கு உரிமை இல்லை.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் நிறைய பேர் மனித உரிமைகள் குறித்து பேசுகின்றனர். பயங்கரவாதத்திற்கு துணைபோகும் அவர்கள் காஷ்மீர் எல்லையில் உயிரைப்பறிகொடுக்கும் நூற்றுக்கணக்கான வீரர்களின் நிலை குறித்து கவலை கொண்டதில்லை என சாடினார்.