சத்தீஷ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில், 'கோர்பா' என்ற நகரம் உள்ளது. இங்கு உருது மொழியில் எழுதப்பட்ட 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமாயண காவியம் வைக்கப்பட்டுள்ளது.
அந்தக் காவியத்துக்கு உருது மொழியில் 'ராம் லீலா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் காவியம் ராமரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் ஒரு புராணக் கதை ஆகும்.
ராமபிரானின் வரலாற்றை முகலாயர்கள் அறிந்துகொள்ளும் வகையில், இந்தப் புத்தகம் உருது மொழியில் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.
உருது 'ராம்லீலா' புத்தகத்தில் ராமர் வாழ்க்கை, சீதாவுடனான அவரது திருமணம் மற்றும் அவர்களது 14 ஆண்டுகள் துறவறம், மனைவியை மீட்க இலங்கை சென்ற பயணம், இறுதியில் அயோத்தியாவுக்குத் திரும்புவது பற்றிய அத்தியாயங்கள் உள்ளன.
மேலும் இந்தப் புத்தகத்தில் சுவாரஸ்யமான சில அத்தியாயங்களும் உள்ளன. தசரத மன்னன் குறித்தும் அவரின் மனைவி பற்றிய குறிப்புகளும் உள்ளன.
ராமர் வளர்ந்த விதம், அவரின் அழகு மற்றும் அவரின் வளர்ப்புத் தாயுமான கைகேயி பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கைகேயின் அழகு காஷ்மீரோடு ஒப்பிடப்படுகிறது.
'ராம் லீலா' புத்தகம் குறித்து தொல்பொருள் ஆய்வு மைய வழிகாட்டி ஹரி சிங் கூறும்போது, 'உருது ராம்லீலா முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை. ராம் லீலாவைப் போல, ராம் பகவான் பற்றிய கதை வெவ்வேறு வழிகளில் மீண்டும் சொல்லப்பட்டுள்ளது.
உருது புத்தகம் இந்திய கலாசாரம், முரண்பாடுகள் குறித்தும் கூறுகிறது. சமஸ்கிருதத்தில் சொல்லப்பட்ட சில கருத்துகள் முரணாக உள்ளன. இருப்பினும், இந்த ராம் லீலா நமது ஒற்றுமையை கலாசாரத்தையும் பிரதிபலிக்கிறது'' என்றார்.