நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. பல முக்கிய மசோதாக்களை மத்திய அரசு இந்தக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றும் எனக் கூறப்பட்டது. இதையடுத்து, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா டிசம்பர் 9ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மாநிலங்களவையில் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவாதத்தில் பங்கேற்ற மத்திய முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் சரமாரி கேள்விகளைத் தொடுத்தார்.
அப்போது அவர், "சட்டவிரோதமான மசோதாவை நிறைவேற்ற அரசு முயற்சித்துவருகிறது. இந்த மசோதாவை உச்ச நீதிமன்றம் ஏற்காது என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. இந்துத்துவ கொள்கையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த மசோதாவை வலுக்கட்டாயமாக நிறைவேற்ற அரசு முயற்சித்துவருகிறது. இன்று சோகமான நாள். இந்தச் சட்டத்தை நீதிமன்றம் நிராகரித்துவிடும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
அண்டை நாடுகள் அனைத்தையும் சேர்க்காமல் ஒரு சில நாடுகள், மதங்களை மட்டும் இந்த மசோதாவில் சேர்த்தது ஏன்? மத பாகுபாட்டை மட்டும் ஏன் சட்டத்தில் சேர்த்தார்கள்? பல்வேறு ரீதியில் பாகுபாடு காண்பிக்கப்படுகிறது. அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பாகுபாடு காண்பிக்கப்படுகிறது.
இலங்கையைச் சேர்ந்த இந்துக்களையும் பூட்டானைச் சேர்ந்த கிறிஸ்தவர்களையும் மசோதாவில் சேர்க்காதது ஏன்? அரசின் தலைமை வழக்கறிஞரிடம் இது குறித்து அரசு ஆலோசித்திருந்தால், அவரை அவைக்கு அழைத்து நேரடியாக கேள்வி கேட்க முடியும். சட்டப்பூர்வமான உத்தரவாதத்தை சட்ட அமைச்சகம் அரசுக்கு அளித்திருந்தால், அதுகுறித்த ஆவணங்களை அவையில் சமர்ப்பிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: மும்பை: சூட்கேஸில் மற்றுமொரு உடல்!