கரோனா வைரஸ் பாதித்த நபர்களை பரிசோதனை செய்யும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. இதை சரிசெய்யும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.
இந்நிலையில், கேரளாவின் திருவல்லா துணை ஆட்சியர் டாக்டர் வினய் கோயல், புதுமையான ஐடியா மூலம் களப்பணியாளர்களை பாதுகாக்க முடிவு செய்தார்.
மருத்துவ படிப்பு முடித்துள்ள துணை ஆட்சியர், தனது நண்பர்களுடன் இணைந்து எஸ்யூவி காரை ரேபிட் ஸ்கிரீனிங் வாகனமாக மாற்றி வடிவமைத்துள்ளார். இதற்காக டாக்டர் ஜெஃபி சக்கிட்டா ஜேக்கப் தலைமையிலான மருத்துவர்கள் குழுவும், பொதுப்பணித் துறையும்(PWD), உதவி பொறியாளர் மேத்யூ ஜான் தலைமையிலான தொழில்நுட்பக் குழுவும் இணைந்து வடிவமைத்துள்ளனர்.
இதுகுறித்து டாக்டர் வினய் கோயல் கூறுகையில், " வாகனத்தின் முன்னால் வெப்பம் கண்டறியும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதை வாகனத்திற்குள் இருந்தே கட்டுப்படுத்தும் மருத்துவர்கள், வாகனத்தின் முன்னால் நிற்பவர்களின் விவரங்களை விசாரித்துப் பெற்று கொள்வார்கள்.
வாகனத்திற்குள் இரண்டு மருத்துவர்களும், ஒரு உதவியாளரும் இருப்பார்கள். இரு தரப்பினரும் மைக்ரோஃபோன் வசதி மூலமாக உரையாடி கொள்வார்கள். இந்த வாகன வடிவமைப்பிற்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. விரைவில் அதிநவீன தொழில்நூட்பம் மூலம் ரூ.8 ஆயிரமாக குறைக்க முயற்சி செய்து வருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: விபத்திற்குள்ளான இந்திய விமானப்படை விமானம்