புதுச்சேரி மாநிலம், உருளையன்பேட்டை பகுதியிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மருத்துவக் கல்விக்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டில் 50 சதவிகிதம் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் ஓபிசிக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று கூறி உள்ளது.
இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஒருபுறம் இந்துக்களுக்காகப் போராடுவதாகக் கூறி வரும் பாஜகவினர், இந்து பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கிறது. இதைக் கண்டித்து வரும் 28ஆம் தேதி விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. பாஜகவின் மூத்த தலைவர்கள் உள்பட பலர் நாவினை மீறி தலைவர்களை இழிவுபடுத்தி வருகின்றனர்.
இது எல்லாம் தமிழ்நாட்டில் சாதி, மதம் பெயர்களால் வன்முறையைத் தூண்ட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுகின்றனர் என்பது தெரிகிறது. பெண்களைப் பற்றி பாஜகவினர் தவறாகக் கூறி வருகின்றனர். எஸ்.வி சேகர் ஊடக பெண்களை இழிவாக சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். இவர்கள் மீது தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால் நான் பேசியதை திரித்து அவமதிக்கும் வகையில் என்னை பற்றி தவறாக பேசி வருகின்றனர். இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மனுநூல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நவம்பர் 3, 4, 5 தேதிகளில் மகளிர் விழிப்புணர்வு பரப்புரை விசிக சார்பில் நடத்தப்பட உள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சிறுமிகள் மீதான வன்கொடுமை, தலித் மீதான வன்கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. அதிமுகவினர் திமுகவுக்கு எதிராக தேர்தல் என்ற பெயரில் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். இது ஒரு அநாகரிகமான அரசியலாக தெரிகிறது. இத்தகைய போக்கை கைவிட வேண்டும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இட ஒதுக்கீடு 10 சதவீதம் பெற்று தரப்படும் என புதுச்சேரி அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றார் திருமாவளவன்.
இதையும் படிங்க:திருமாவளவன், ஸ்டாலின் தமிழ்நாட்டில் நடமாட முடியாது - எல் முருகன் காட்டம்!