இந்தியாவில் தயாரிக்கப்பட்ட “கோவாக்சின்” தடுப்பூசியை ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் பரிசோதித்துவருகிறது. முதலாம் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து, பல மாநிலங்களில் 2ஆம் கட்ட பரிசோதனை நடைபெற்றுவருகிறது. இந்த பரிசோதனையின் முதற்கட்ட முடிவுகளில் தடுப்பூசி பாதுகாப்பானது என உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், கோவாக்சின் மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை வரும் நவம்பர் மாதம் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து மருத்துவ பரிசோதனை நோடல் அலுவலர் மருத்துவர் பிரபாகர் ரெட்டி கூறுகையில், “கோவாக்சின் முதற்கட்ட பரிசோதனை நிம்ஸில் (NIMS) வெற்றிகரமாக நடைபெற்றது. இரண்டாம் கட்ட சோதனைகளில், 12 பேருக்கு பூஸ்டர் டோஸ் கொடுத்து தடுப்பூசி போடப்பட்டது. மேலும் 55 பேருக்கு அடுத்த மூன்று நாட்களில் தடுப்பூசி வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
தடுப்பூசி போடப்பட்டு 14 நாள்களுக்கு பிறகு, அவர்கள் ரத்த மாதிரிகள் சேகரிப்பட்டு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (ICMR) அனுப்பப்படவுள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் மொத்தம் 100 தன்னார்வலர்கள் பங்கேற்றதாக தெரிவித்த மருத்துவர் பிரபாகர் ரெட்டி, வரும் நவம்பரில் தொடங்கவுள்ள மூன்றாம் கட்ட சோதனைகளில் 200 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக விளக்கினார்.
இதையும் படிங்க...இந்தியாவில் கரோனா நிலவரம்: 72,049 பேருக்கு பாதிப்பு, 986 பேர் உயிரிழப்பு