இந்திய ராணுவத்தின் ஏஎஸ்சி மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெற்றது. இதில், டர்நாடஸ் என்ற அணியின் வீரர்கள் தீ குகைக்குள் நுழைந்து வெற்றிகரமாக சாகச பயணத்தை மேற்கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
அதேபோல், ராணுவ கேப்டன் சிவம் சிங், புல்லட் பைக்கில் 130 மீட்டர் தூரத்திற்கு நெருப்பு குகைக்குள் பயணித்து உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது, அவர் 127 மீட்டர் தூரத்தை கடந்தபோது அனலின் சூட்டை தாங்க முடியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானார். பாதுகாப்புக் கவசம் அணிந்திருந்தால், இந்த விபத்தில் சிறு தீக்காயங்களுடன் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
விபத்து நிகழ்ந்தபோது, சிவம் சிங் துரிதமாகச் செயல்பட்டதால் தீ குகையில் இருந்து சிறு காயங்களுடன் வெளியேறினார். குகையிலிருந்து தீக்காயங்களுடன் வெளியே வந்த அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ராணுவ கேப்டன் சிவம் சிங் இதுபோன்ற சாகச விளையாட்டில் ஈடுபடுவது இது முதல் அல்ல. சிவம் சிங்குடன் சேர்ந்து 38 வீரர்களைக் கொண்ட குழு, கடந்த இரண்டு நாட்களில் ஒன்பது முறை இதேபோன்று சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளது.
இந்த சாகச பயணத்தின்போது, கின்னஸ் உலக சாதனை புத்தகம், இந்தியா ரெக்கார்டு புக் உள்ளிட்ட பிற பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். தற்போது, ஆபத்தான நிலையை கடந்துள்ள சிவம் சிங், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.