கர்நாடக மாநிலத்தில் உருவாகும் தென்பெண்ணை ஆறு தமிழ்நாட்டின் தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்றை கட்ட கர்நாடகம் முயற்சித்துவருகிறது.
இதனைத் தமிழ்நாடு அரசு எதிர்த்துவந்த நிலையில், கர்நாடகத்தின் முயற்சிக்கு உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு நவம்பரில் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. எனவே, இது இரு மாநில நதிநீர் பங்கீட்டு விவகாரம் என்பதால் தென் பெண்ணையாறு நதிநீர் பங்கீட்டு நடுவர்மன்றம் அமைக்க வேண்டும் என்றும் அதுவரை தடுப்பணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தமிழ்நாடு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில், மத்திய அரசின் சார்பில் தமிழ்நாடு, கர்நாடகம் இடையேயான நதிநீர் பங்கீட்டு விவகாரம் தொடர்பாக உயர்மட்டக் குழு வரும் மார்ச் 24ஆம் தேதி கூடவுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசின் மனுவை மார்ச் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
அந்தக் கூட்டத்தில் தென்பெண்ணை விவகாரம் விவாதிக்கப்படவுள்ளதாகவும் விசாரணையின்போது கூறப்பட்டது. தென்பெண்ணை குறுக்கே அணைகட்டப்பட்டால் தமிழ்நாட்டின் ஐந்து மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க:பேருந்து விபத்து: உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது - பாலக்காடு ஆட்சியர்!