இந்திyaa-பாகிஸ்தான் எல்லையிலுள்ள கார்கில் பகுதியில் இரு நாடுகளுக்கிடையே 1999ஆம் ஆண்டு போர் மூண்டது. சுமார் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றது.
போரில் இந்திய வீரர்களின் தியாகத்தைப் பொற்றும் வகையிலும் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
காஷ்மீரின் கார்கில் பகுதில் 1999ஆம் ஆண்டு பிரிவினைவாதிகள் போர்வையில் ராணுவத்தினர் ஊடுருவினர். அவர்களை அந்தப் பகுதியிலிருந்து விரட்டியடிக்க ஆபரேஷன் விஜய்யை இந்திய ராணுவம் செயல்படுத்தியது.
தொடக்கத்தில் கார்கில் பகுதியில் தங்கள் ராணுவம் ஊடுருவவில்லை என்றும் ஜிகாதிகள்தான் அப்பகுதியில் ஊடுருவியுள்ளனர் என்றும் பாகிஸ்தான் தரப்பில் தொடர்ந்து மறுக்கப்பட்டது.
ஆனால், பாகிஸ்தானின் ராணுவத் தளபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அஜீஸ்கான் ஆகியோருக்கு இடையிலான ஒரு தொலைபேசி உரையாடல், பாகிஸ்தான் அப்பட்டமான பொய்களை கூறுவதை சர்வதேச நாடுகளுக்கு அம்பலப்படுத்த உதவியது.
உரையாடலில் என்ன பேசிக் கொண்டார்கள்?
சீனாவுக்குச் சென்றிருந்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி பர்வேஸ் முஷாரஃப், பாகிஸ்தானிலிருந்த லெப்டினன்ட் ஜெனரல் முகமது அஜீஸ் கானை முதன்முதலில் 1999ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி தொடர்புகொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து, மூன்று நாள்கள் கழித்து இரண்டாவது முறையாக மே 29ஆம் தேதி இருவரும் தொலைபேசியில் பேசினர்.
இருவருக்கும் நடைபெற்ற இந்த உரையாடலை இந்திய உளவு பிரிவு இடைமறித்து கேட்டுள்ளது. பாகிஸ்தான் படையெடுப்பு குறித்தும் அவர்களின் நோக்கங்கள் குறித்தும் வெளியுலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்ட ஜூன் 11ஆம் தேதி இந்த உரையாடல் ரா உளவுத் துறையினரால் வெளியிடப்பட்டது.
பொதுவெளியில் வெளியிடுவதற்கு சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர், இந்த உரையாடலின் நகல்கள் பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு அனுப்பப்பட்டது.
இந்த உரையாடல்களில் கார்கிலில் அப்போது நிலவிய நிலை, பதற்றத்தை தணிக்க இந்தியா வரவிருந்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சர்தாஜ் அஜீஸின் பயணம், இந்த ஊடுருவலில் முஷாரப்பின் ஆலோசனைகள் மற்றும் முஜாஹிதீன் அமைப்பினர் பங்கு ஆகியவை குறித்து இடம்பெற்றிருந்தது.
மேலும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு அதிமுக்கிய நிகழ்வுகளை மட்டுமே ராணுவத் தளபதி பர்வேஸ் முஷாரஃப் தெரியப்படுத்துகிறார் என்பது அந்த தொலைபேசி உரையாடலை கேட்டால் தெளிவாக புரிகிறது.
கார்கில் பகுதியில் நடைபெற்ற ஊடுருவலில் பாகிஸ்தானிற்கு உள்ள பங்கை இந்த தொலைபேசி உரையாடல் தெளிவாக விளக்குகிறது. என்றாலும், கார்கில் பகுதியில் தொடக்கத்தில் கொல்லப்பட்ட நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் இந்த ஊருடுவலில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு நேரடி தொடர்பு இருந்தது உறுதியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் ஊடுருவல் குறித்து இந்திய ராணுவத்திற்கு தகவல் தெரிவித்த ஆடு மேய்ப்பன்