கடந்த மாதத்திலிருந்து தலைநகர் டெல்லி கடும் காற்று மாசு சிக்கலில் தவித்து வருகிறது. அன்றாட வேலைகளில் ஈடுபட முடியாமல் தவித்து வரும் மக்கள், வெளியே செல்லும்போது முகமூடியுடன் பயணிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
மாசு அளவைக் குறிக்கும், ஏர் க்வாலிடி இன்டெக்ஸ் அளவானது 600 புள்ளிகளைத் தாண்டியுள்ளது. அறிவியல் கணக்கின்படி மிக மோசமான நிலையை எட்டியுள்ள இந்தக் காற்று மாசு சிக்கல் குறித்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி நேரில் விளக்கமளித்தார்.
அதில் 'கார்கள் மற்றும் ஏனைய நான்கு சக்கர வாகனங்களில் வெளியேறும் புகைகளைக் கட்டுப்படுத்த 'ஆட் - ஈவன்' எனப்படும் ஒற்றை இரட்டை இலக்கத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்திற்கும் கட்டுப்பாடு அளிக்கும்பட்சத்தில் நகரமே இயக்கமில்லாமல் நின்றுவிடும்' என்றார்.
ரோத்தகியின் வாதத்தைக் கேட்டறிந்தபின் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், டெல்லி அரசு கொண்டு வந்துள்ள 'ஆட் - ஈவன்' திட்டத்தால் காற்று மாசு குறைந்துள்ளதா என்பதை அம்மாநில அரசு பதிலளிக்கத் தயங்கி வருகிறது. அரைவேக்காட்டுத் திட்டமான இது மட்டும் காற்று மாசை நீக்க போதுமான நடவடிக்கையாகத் தெரியவில்லை. மக்களின் உயிர்த் துடிப்பில் பொறுப்பில்லாமல் செயல்படுவது கண்டனத்திற்குரியது என்றது.
பஞ்சாப், ஹரியானா, டெல்லி மாநிலத் தலைமைச் செயலாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, ஆட் - ஈவன் திட்டத்தின்படி, வாரத்தில் ஒரு நாள் ஒற்றை இலக்க எண்களைக் கொண்ட வாகனங்களையும், அதேபோல் மற்றொரு நாளில் இரட்டை இலக்க எண்களைக் கொண்ட வாகனங்களையும் மட்டுமே சாலைகளில் பயன்படுத்த வேண்டும் என டெல்லி மாநில அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒப்பற்ற வில்லனின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்!