உலகளாவிய பெருந்தொற்று நோயான கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் 1,535 பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 24 பேர் உயிரிழந்ததாக அம்மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்திருந்தது.
கடந்த 25ஆம் தேதியிலிருந்து ராஜஸ்தானில் பள்ளி-கல்லூரிகள், மக்கள் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பொழுதுபோக்கு மையங்கள், அரசு அலுவலங்கள் என அனைத்தையும் மூட வேண்டும் என அம்மாநில அரசு ஊரடங்கிற்கு உத்தரவிட்டது. வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு வேகமாக முன்னெடுத்துவருகிறது.
இருப்பினும் நாளுக்குநாள் அதிகரித்து வந்த தொற்றுநோய் பரவல் காரணமாக ராஜஸ்தான் மாநிலம் இரண்டாம் கட்ட ஆபத்து நிலையை அடைந்திருக்கிறது. அம்மாநிலத்தில் 12 மண்டலங்கள், கோவிட்-19 பெருந்தொற்றின் சிவப்பு குறியீட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த 14ஆம் தேதியன்று ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும், மாநில அரசுகள் சில தளர்வுகளை நடைமுறைப்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, தொழில் நிறுவனங்களுக்கு இன்று (ஏப்ரல் 20) முதல் இயங்க சில புதிய வழிகாட்டுதல்களை ராஜஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது. இதன் கீழ் தொழில்கள், அரசு அலுவலகங்கள், முக்கியமான கடைகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில தளர்வுடன் இதற்கு இசைவு அளித்தாலும் கட்டுப்பாடுகள் முன்பை விட அதிக கண்டிப்புடன் இருக்குமென அறிய முடிகிறது.
இது தொடர்பாக ராஜஸ்தான் அரசு வெளியிடுள்ள உத்தரவில், “ஊரடங்கு தளர்வின் போது சமூக இடைவெளியை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டுமெனவும், கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டுமென அரசாங்கம் தெளிவுப்படுத்தியுள்ளது.
குடிநீர், மின்சாரம், தொலைபேசி, சமையல் எரிவாயு உள்ளிட்ட வீட்டு விநியோகம், இணைய வர்த்தகம், கூரியர் சேவைகள், விவசாய, தோட்டப் பணிகள் உள்ளிட்ட பொது பயன்பாட்டு சேவைகள் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியுடன் தான் திருமணங்களும் இறுதிச் சடங்குகளும் நடைபெற வேண்டும். பொது இடங்களில் துப்புவது தண்டனைக்குரியது. புகையிலை, மதுபானம், குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனைக்கு கடுமையான தடை விதிக்கப்படுகிறது.
அத்தியாவசியப் பொருட்களை வாங்க வரும் நுகர்வோர் முகமூடி அணியவில்லை என்றால், கடைக்காரர் அவருக்கு எதையும் விற்க கூடாது. அவர்கள் கடைக்குள் நுழைய அனுமதிக்கப்பட கூடாது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சிறிய அளவிலான கடையில் இரண்டு பேரும், பெரிய கடையில் 5 பேரும் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
இதனுடன், அனைத்து பணியிடங்களிலும் பணியாளர்களின் உடல் வெப்பநிலையை சரிபார்க்க போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். பணியிடத்தில் வேலை நேரங்களுக்கு இடையில் ஒரு மணி நேர இடைவெளி அளிக்க வேண்டும். சமூக இடைவெளியோடு அனைத்து அமைப்புகளும் தங்கள் பணிநிலையங்களை இயங்க வேண்டும்.
இவற்றை பின்பற்றாதவர்கள் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005இன் பிரிவு-51யின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். தவறினால் ஒரு ஆண்டு வரையிலான சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இந்த உத்தரவுக்கு இணங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் , காவல்துறை உள்ளிட்ட பிற அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது”, என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சரக்கு கிடைக்காத விரக்தியில் சானிடைசரை குடித்த அக்கா-தம்பி மரணம்!