உலகெங்கிலும் உள்ள நாடுகள் தொடர்ச்சியாக இணையத்திலிருந்து வரும் அச்சுறுத்தல்களை தினந்தினம் எதிர்கொண்டுவருகின்றன. கணினி, ஸ்மார்ட் போன்கள், டிஜிட்டல் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி இணைய குற்றவாளிகள் எனப்படும் சைபர் குற்றவாளிகள் (Cyber criminals) இந்தியாவிலும் கடுமையான குற்றங்களைச் செய்துவருகிறார்கள். இந்த இணைய குற்றங்களினாலும் தாக்குதலினாலும் பணத்தை இழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.
குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சைபர் குற்றத்தை தெலங்கானாவின் ஹைதராபாத் நகரம் எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தெலங்கானா மாநில காவல் துறையானது தேசிய காவல் துறை அகாடமியுடன் (National Police Academy) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி தேசிய காவல் துறை அகாடமியானது, உதவி ஆய்வாளர் முதல் டிஎஸ்பி வரை அனைத்து நிலைகளிலிருக்கும் காவல் அலுவலர்களுக்கும் குற்றவாளிகளின் செயல்பாட்டு முறை குறித்தும் அவர்களை எப்படி கையாள்வது என்பது குறித்தும் பயிற்சியளிக்கும்.
கடந்த ஆண்டில் மட்டும் தெலங்கானாவில் 14,000 சைபர் குற்ற வழக்குகள் பதிவாகின. இருந்தும் அவற்றில் ஒரு சில குற்றங்கள் மட்டுமே தீர்க்கப்பட்டன. இந்நிலையில் தேசிய காவல் துறை அகாடமி வழங்கும் இப்பயிற்சியானது எப்படி சைபர் குற்றங்களைக் கண்டுபிடிக்க உதவும் என்பதை காலம் மட்டுமே தீர்மானிக்கும். சைபர், நிதி, போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்ற வழக்குகளுக்கு சிறப்புக் காவல் நிலையங்களை அமைத்த கர்நாடக அரசானது, இவ்வழக்குகளுக்காகப் பணியாற்ற பயிற்சிபெற்ற பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக சமீபத்தில் தெரிவித்துள்ளது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் தங்களது முக்கியமான தரவுகளை ஹேக்கர்கள் திருடுவதைத் தடுக்க பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் (Blockchain technology) கொண்டுவந்தன.
இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பிகார் போன்ற மாநிலங்களில் நடக்கும் சைபர் மோசடிக்காரர்களை காவல் துறையினர் அடையாளம் கண்டாலும், தொடர்ந்து அதிகரித்துவரும் இணைய வர்த்தக ஊழல்களையும் வங்கிக் கணக்குகளை முடக்கும் ஹேக்கர்களையும் கண்டுபிடிக்க தவித்துவருகின்றனர்.
தேசிய குற்றப் பதிவு பணியகம் (National Crime Records Bureau) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, சைபர் குற்றங்கள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் ஆந்திராவும் தெலங்கானாவும் உள்ளன. உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மட்டும் 2016ஆம் ஆண்டு முதல் 2018 ஆண்டு வரை சுமார் 33,000 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஆந்திராவிலும் தெலங்கானவிலும் சைபர் தாக்குதல்கள் இரு மடங்காக அதிகரித்துள்ளன.
டெபிட், க்ரெடிட் கார்ட் ஊழல்களுக்கு ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்தாரா பெயர் பெற்றதாகும். அதேபோல ராஜஸ்தானில் உள்ள பரத்பூர் மாவட்டமானது ஓ.எல்.எக்ஸ். ஆட்டோமொபைல் (OLX Automobile) ஊழலுக்குப் பெயர்போனதாகும். தற்போது தென் இந்தியாவில் நடந்துவரும் இதுபோன்ற ஊழல்கள் மூலம் இந்த மோசடி கும்பல்கள் தென் மாநிலங்களைக் குறிவைக்க காத்திருப்பது நிரூபணமாகியுள்ளது.
சமீபத்தில் இணைய மோசடி கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவர் போலி பான் கார்ட் (PAN card) ஒன்றை தயார்செய்து லட்சக்கணக்கான ரூபாயைக் கொள்ளையடித்த சம்பவம், இணைய குற்றங்கள் எந்தளவு அதிகரித்துள்ளன என்பதைக் காட்டுகிறது. ஒரு படம் பார்க்கும் டிக்கெட்டில் தொடங்கி வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவது வரை பலரும் இன்று இணைய பரிவர்த்தனையையே அதிகம் நாடுகின்றனர். இது கொள்ளையடிக்கக் காத்திருக்கும் இணைய குற்றவாளிகளுக்கு அதிக வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொடுக்கிறது.
சைபர் குற்றங்கள் குறித்த புகார்களை ஆன்லைனில் தெரிவிக்க இந்திய அரசானது தேசிய இணைய குற்ற அறிக்கையிடல் முகப்பு (National Cyber Crime Reporting Portal) ஒன்றை தொடங்கியுள்ளது. இந்த முயற்சியை வெற்றிபெறச் செய்ய மத்திய அரசானது மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து இணைய குற்றச் செயல்களை நலிவடையச் செய்யலாம்.
சைபர் குற்றங்கள் தனிப்பட்ட அரசாங்க நிதிகளையும் தலைகீழாக மாற்றுகின்றன. கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆலை நெட்வொர்க்கில் சைபர் தாக்குதல் நடைபெற்றது இணையவாசிகளையே திகைப்புறச் செய்தது. சமீபத்தில் ஆந்திரா, தெலங்கானாவின் மின் பயன்பாட்டு தளங்களில் நடந்த ரான்சம்வேர் (Ransomware) தாக்குதல் ஒட்டுமொத்த தேசமும் எவ்வளவு பெரிய இணைய அச்சுறுத்தலை எதிர்கொண்டுவருகிறது என்பதை நிரூபித்தது.
கூடங்குளம் சைபர் தாக்குதல் பின்னணியில் வடகொரியா ? அதிர்ச்சி தகவல்
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் நடந்த இணைய தாக்குதல்களில், சுமார் 370 லட்சம் கோடி ரூபாயை பன்னாட்டு நிறுவனங்கள் இழந்திருக்கின்றன. போலாந்து, வியட்நாம், வங்க தேசம், ஈக்வடோர் போன்ற நாடுகளில் நடந்த பெரிய பெரிய ஹேக்கிங்குகளை கண்டறிந்த சைமென்டெக் (Symantec) என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனம், சைபர் பாதுகாப்பில் மோசமான நிலையில் உள்ள இந்தியாவை முன்கூட்டியே எச்சரித்தது.
ஆனால் அருகாமை நாடான சீனாவோ, சைபர் பாதுகாப்புக்கும் தரவு பாதுகாப்புக்கும் புதிய யுக்தியை உருவாக்கிவருகிறது. மத்திய அரசானது இணைய பாதுகாப்புக்கென்று சிறப்பு இணைய முகப்பை அறிமுகப்படுத்தினாலும், நாளுக்குநாள் அதிகரித்துவரும் சைபர் குற்றங்கள், இது குறித்த பல்வேறு துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு இல்லாத்தன்மையை காட்டுகின்றன.
நாஸ்காம் (NASSCOM) எனப்படும் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கமானது 2020ஆம் ஆண்டுக்குள் நாட்டு நிதி மற்றும் பாதுகாப்புக்கு சுமார் 10 லட்சம் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் தேவைப்படுவார்கள் என்று கணித்துள்ளது. சைபர் பாதுகாப்பு வல்லுநர்களுக்கான தேவை அதிகரித்துள்ளபோதிலும் அதற்கான இடங்கள் காலியாகவே உள்ளன. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சைபர் குற்றங்கள் இன்று வானளாவு உயர்ந்து நிற்கின்றன. இதனைக் கட்டுப்படுத்துவற்கான பெரும் சவாலை அரசு எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதே மிகப்பெரும் கேள்விக்குறிதான்.
இதையும் படிங்க: அதிகரிக்கும் சைபர் குற்றம்! தடுப்பது எப்படி?