இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
புதுச்சேரி பாக்கம் உடையான்பேட்டையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த 24ஆம் தேதி மூன்று லட்சம் ரூபாய் பணத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று வழிப்பறி செய்தது. இது குறித்து புதுச்சேரி மங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ், தேவா ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் இந்தக் குற்றத்துக்கு மூளையாகச் செயல்பட்டது தெரியவந்தது. மேலும், அடகுவைத்த நகைகளை மீட்க முடியாதவர்கள் தங்களை அணுகுமாறும், அவற்றை மீட்டு கூடுதல் விலைக்கு விற்றுத் தருவதாக அறிவழகன் விளம்பரம் செய்துள்ளார்.
இதனை நம்பி தொடர்பு கொள்பவர்களிடம் பணத்தை எடுத்து வரச் சொல்லி, கும்பல் மூலம் வழிப்பறி செய்துள்ளார். இது தொடர்பாக விநாயகமூர்த்தி, அவரது கூட்டாளிகளான ஐயப்பன், சிலம்பரசன், சந்தோஷ் ஆகியோரை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து நான்கு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம், மொபைல்ஃபோன் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
இவ்வாறு காவல்துறை கண்காணிப்பாளர் ராகுல் தெரிவித்தார்.