ஷாகர்பூரைச் சேர்ந்த 47 வயதான லட்சுமி என்ற யானைக்கு அதனுடைய பாகன் முறையான வசதிகளை செய்துகொடுக்கத் தவறியதால் வனத்துறையினர் அவரிடமிருந்து யானையை மீட்டு யானைகள் காப்பகத்தில் சேர்க்க முயன்றனர்.
இதையடுத்து யானையை தன்னிடமிருந்து பிரிக்கவேண்டாம் என பாகன், யூசுப் அலி டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார். யானைக்கு தேவையான இருப்பிடத்தை உறுதிசெய்த பின்னரே வனத்துறை யானையை கைப்பற்றவேண்டும் எனவும் நீதிமன்றம் வனத்துறையினருக்கு உத்தரவிட்டது.
பின்னர், யானையை ஹரியானாவிலுள்ள பான் சாந்தூர் யானை மறுவாழ்வு மையத்திற்கு மாற்ற வனத்துறையினர் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி அனுமதி பெற்றனர்.
இதையறிந்த பாகன், யானை லட்சுமியை பதுக்கிவைத்துள்ளார். யானையை காணாததால் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடும் பணியில் ஈடுபட்டுவந்தனர்.
12 காவல் துறை அலுவலர்களால் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு தேடப்பட்டுவந்த யானை லட்சுமி, யமுனா ஆற்றின் கரையோரப்பகுதிகளில் அதன் பாகனால் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல் துறையினர் யானையையும், பாகனையும் கண்டறிந்தனர். மேலும் பாகன் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்துவருகிறது. யானை மீட்கப்பட்டு, ஹரியானாவிலுள்ள யானை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.