விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைய்நல்லூரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு சிறுமி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதற்கு, சமூக ஆர்வலர்கள் பலரும் கடுமையான கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக, விசிகவின் விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அதில், 'இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அதிமுகவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை ஆளும் அதிமுக அரசு, தமது கட்சிக்காரரை காப்பாற்ற முயற்சிக்காமல், இதில் நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும்.
இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்திற்கு, அனுப்பி ஒரு மாதத்திலேயே குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்க வேண்டும். இவர்களை வெறும் கொலைக் குற்றவாளிகளாக கருதாமல் பயங்கரவாதிகளாகக் கருதி, நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த சில மாதங்களாக குறிப்பாக, ஊரடங்கின்போது தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.
குறிப்பாக விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம் பகுதிகளிலும் இந்த வன்கொடுமை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையினர் தனி கண்காணிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: 'சிறுமியை எரித்துக் கொன்ற ஆளுங்கட்சியினரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்' - ஸ்டாலின்