கர்நாடக மாநிலம், துமகூரு பகுதியைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ் (38). இவர் தனது மனைவி நிகிதா (28), மகன் ஆர்ய கிருஷ்ணா (5), தந்தை நாகராஜூ பட்டாச்சார்யா (70), தாய் ஹேமலதா (55) ஆகியோர் மைசூரு தட்டாஹள்ளி பகுதியில் ஒரே குடும்பமாக வசித்து வந்தனர். இவர் மைசூரு விஜயநகர் பகுதியில் அனிமேஷன் மற்றும் டேட்டா பேஸ் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். தொழிலதிபரான இவர், தனது நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்காக பலரிடம் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
ஆனால், தொழிலில் எதிர்பார்த்த அளவு லாபம் ஈட்ட முடியாததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான ஓம்பிரகாஷ், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் தமிழ்நாடு எல்லையிலுள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டைக்குச் சுற்றுலா சென்றார்.
அங்கு, எலச்செட்டி கிராமத்தில் உள்ள தனது நண்பருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் இவர் குடும்பத்துடன் தங்கியிருந்த நிலையில், தனது நண்பருக்கு ஃபோன் செய்து, 'நான் தோற்றுவிட்டேன். நான் நம்பியவர்கள் என்னை கைவிட்டுவிட்டனர். இதனால் நாங்கள் தற்கொலை செய்துகொள்கிறோம். என்னுடைய கார், குண்டலுபேட்டை தனியார் தங்கும் விடுதி அருகே நிற்கிறது' என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டதாகக் கூறப்படுகிறது. மறுநாள் காலை அவரது நண்பர் ஓம்பிரகாஷை வீடு முழுவதும் தேடியுள்ளனர். வீட்டினுள் எவரும் இல்லை.
அப்போது, திறந்தவெளிக்கு சென்று பார்த்தபோது ஓம்பிரகாஷின் மொத்த குடும்பமும் ரத்தவெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் உடனடியாக குண்டலுபேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், ஐந்து பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குண்டலுபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஓம்பிரகாஷின் குடும்பம் இறந்து கிடந்த இடத்தில் துப்பாக்கிகள் கிடந்துள்ளன. மேலும், சம்பவ இடத்திலிருந்து கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகள், கைரேகைகள் ஆகியவற்றை வைத்து இது தற்கொலை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.