மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மெட்ரோ திட்டத்தை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் மும்முராக நடைபெற்றுவருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ரயில் நிலையங்களில் கார் ஷெட் அமைக்க மும்பை ஆரே பகுதியில் உள்ள மரங்களை வெட்ட அப்போதைய தேவேந்திர ஃபட்னாவிஸ் அரசு உத்தரவு பிறப்பத்தது. இரவோடு இரவாக மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், இந்நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி அரசு தற்போது தலைமை ஏற்றுள்ளது. ஆரே பகுதியில் மரங்கள் வெட்டுவதற்கு எதிராக குரல்கொடுத்த சிவசேனா தற்போது ஆட்சிக்கு வந்ததும் மரங்களை பாதுகாக்க உறுதியான நிலைபாட்டை எடுத்துள்ளது. ஆரே காலனியில் கார் ஷெட் அமைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தக்கூறி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே, அரசின் இம்முடிவை மும்பை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர் எனவும் வளர்ச்சிப் பணிக்காக சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளாது எனவும் உறுதியளித்துள்ளார்.
கார் ஷெட்டுக்காக ஆரே காலனியில் கடந்த மாதம் 2 ஆயிரத்து 185 மரங்கள் வெட்டப்பட்டதை அடுத்து மும்பை அரசுக்கு எதிராக சூழலியல் ஆர்வலர்கள் கடும் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிளர்ச்சியாளர்களுக்கு அடிபணித்து ஈராக் பிரதமர் ராஜினாமா