ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலையிலிருந்து இரண்டு என்கவுன்ட்டர் சம்பவங்கள், ஒரு வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அம்மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்தே அங்கு பதற்றம் நிலவிவருகிறது.
இந்நிலையில், ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றை ரம்பன் மாவட்டத்தில் மூன்று பயங்கரவாதிகள் தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளனர்.
ஆனால், சாதுர்யமாக செயல்பட்டு பேருந்தை விரைந்த ஓட்டிய ஓட்டுநர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர், அவர்களை பிடிக்க பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர். மேலும், பயங்கரவாதிகள் ஒரு வீட்டில் புகுந்து பணயக் கைதிகளை பிடித்து வைத்துள்ளதாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கனமழை பெய்து வருவதால் தேடுதல் வேட்டையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.