புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு தின நிகழ்ச்சி புதுச்சேரி காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று ( வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில், முதலமைச்சர் நாராயணசாமி, வெங்கடசுப்பா ரெட்டியாரின் மகனும் மக்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம், காங்கிரஸ் நிர்வாகிகள் எனப் பலர் பங்கேற்றனர். கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வெங்கடசுப்பா ரெட்டியாரின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் கிரண்பேடியை எதிர்த்து மீண்டும் போராட காங்கிரஸ் கட்சியினர் தயாராக வேண்டும். காங்கிரஸ் கட்சியினரின் பலத்தினாலேயே அவரை எதிர்த்து வருகின்றேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் நீட் தேர்வு தோல்வியால் மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, தமிழ்நாட்டில் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், நாராயணசாமி பேசியது தொடர்பாகப் பதிலளித்துள்ள கிரண்பேடி, ஆளுநருக்கு எதிராகப் போராட்டத்தைத் தூண்டுவது உண்மையிலேயே வருந்தத்தக்கது என வேதனை தெரிவித்தார். மேலும், உள் துறையை கையில் வைத்திருக்கும் அவர், சட்டத்திற்கு எதிராக எவ்வாறு செயல்படலாம்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.