நாடு முழுவதும் கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பினைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ஆம் தேதிமுதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் நீட்சியாக தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இம்மாதம் 30ஆம் தேதிவரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி இன்றுமுதல் வழிபாட்டுத்தலங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வழிபாட்டுத் தலங்களில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு கட்டுப்பாடுகளையும் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் 75 நாள்களுக்குப் பின்னர் இன்று அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டன.
உலகப்புகழ்பெற்ற மணக்குள விநாயகர் ஆலயம், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் ஏராளமான பக்தர்கள் தகுந்த இடைவெளியுடன் வழிபட்டனர். காலை 6 மணிக்கு திறக்கப்பட்ட கோயில்களில் நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள் கைகளைக் கழுவிய பின்பு அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
கோயிலில் அபிஷேக தீபாராதனை நடத்தப்படவில்லை. பக்தர்களுக்குப் பிரசாதங்களும் வழங்கப்படவில்லை. அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறதா என்பதை மாவட்ட நிர்வாக அலுவலர்கள் கண்காணித்துவருகின்றனர்.