இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக தீநுண்மி பரவலின் வேகம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், சில நாள்களில் கரோனா இல்லாத மாநிலமாகத் தெலங்கானா மாறும் என்று அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கே. சந்திரசேகர் ராவ் திங்கள்கிழமை காணொலி கலந்தாய்வு முறையில் பிரதமர் மோடியுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர், உயர்மட்ட அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
திங்கள்கிழமை 159 பேருக்கு கோவிட்-19 தொற்று குறித்து மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அதில் இருவருக்கு மட்டுமே கரோனா தீநுண்மி தொற்று உறுதிசெய்யப்பட்டதாகவும் அலுவலர்கள் முதலமைச்சரிடம் தெரிவித்தனர்.
மாநிலம் முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதாலேயே தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருவதாக முதலமைச்சர் கூறினார். தெலங்கானாவில் மே 7ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேசிய அவர், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தனிமைப்படுத்தல் காலம் மே 8ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவதால் அரசின் நடவடிக்கைகள் எதுவும் தளர்த்தப்படாது. அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகளை மக்கள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
மாநிலத்திலுள்ள 21 மாவட்டங்கள் கோவிட்-19 தொற்று இல்லாத மாவட்டமாக செவ்வாய்க்கிழமை (மார்ச் 28) மாறும். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 97 விழுக்காட்டினர் குணமடைந்துவருகின்றனர்" என்றார்.
மேலும், டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்கள் தொடர்புகொண்ட நபர்கள் குறித்த தகவல்களைத் திரட்டும் பணி தொடர்ந்து நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உத்தவ் தாக்கரேவை எம்.எல்.சி. ஆக்குங்கள் - அமைச்சரவை மீண்டும் பரிந்துரை!