தெலங்கானாவில் 27 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். இது சட்டவிரோதம் என்று கூறிய மாநில அரசு, அவர்களை மீண்டும் பணிக்கு அனுமதிக்க மாட்டோம் எனக் கறாராக கூறிவிட்டது.
போக்குவரத்து ஊழியர்களும் தங்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கும் வரை போராட்டம் தொடரும் என்று பிடிவாதமாக உள்ளனர். இதற்கிடையில் இது தொடா்பான வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
மாநில அரசு, போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இது தொடர்பாக பேசிய தொழிற்சங்க தலைவர், போராட்டத்தை கைவிடும் எண்ணம் எதுவும் இல்லை. ஆனால் அரசு நடத்தும் பேச்சுவார்த்தையில் தலைவர்கள் கலந்துகொள்வார்கள். எனினும் எங்களின் கோரிக்கையில் நாங்கள் உறுதியாக உள்ளோம். போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் இன்று போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. பேருந்துகள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதற்கிடையில் ஆங்காங்கே சில பகுதிகளில் காவலர்கள் மேற்பார்வையில் பேருந்துகள் இயக்கப்பட்டன.
தெலங்கானா பாரகலா பகுதியில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தொடர்ந்து நடந்தது. வாரங்கல் பகுதியில் போக்குவரத்து ஊழியர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
ஹைதராபாத்திலும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தொடர்ந்தது. தெலங்கானா ஜன சமிதி தலைவர்கள் காவலர்களால் காவல் நிலைய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிக்க: 'ஓட்டுநர் வேலை நிறுத்தத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம்'