தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ். ஜெய்பால் ரெட்டி நிமோனியா நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், ஜெய்பால் ரெட்டி சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை 1.28 மணிக்கு காலமானார். இவருக்கு வயது 77.
1984ஆம் ஆண்டு முதல் மத்திய அரசில் முக்கியப் பதவி வகித்தவர். மேலும், பல ஆண்டுகளாக நாடாளுமன்றத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
ஐ.கே. குஜ்ரால் அரசில் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். மேலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ-1) ஆட்சியில் நகர்ப்புற வளர்ச்சி, கலாசாரம் போன்ற முக்கிய துறைகளில் பதவி வகித்தவர்.
தொடர்ந்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தபோது, மீண்டும் நகர்ப்புற வளர்ச்சித் துறையில் அமைச்சராக பதவி வகித்தார். பின்னர், அவர் பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறையின் அமைச்சராகவும் இருந்தார்.
ஜெய்பால் ரெட்டி உயிரிழந்த நிலையில், அவரின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் எனத் தெரிகிறது. அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.