தெலங்கானா மாநிலத்தில், மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு ஐந்து வயது சிறுமி உதவியாக இருந்துள்ளார். அந்தச் சிறுமியை மாற்றுத்திறனாளிப் பெண் தினமும் துன்புறுத்தி வந்துள்ளார். அவர் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக காவல் ஆய்வாளர் பாலிஷெட்டி சதீஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாலிஷெட்டி சதீஷ் கூறியதாவது, 'சேதர்காட் காவல் நிலைய எல்லையில் உள்ள வாகேத் நகர்ப்பகுதியில் நேற்று முன் தினம் (ஜூன் 12) மாலை 3:30 மணியளவில் ஐந்து வயது சிறுமியை குழந்தைத் தொழிலாளியாகப் பயன்படுத்துவதாகவும், மாற்றுத்திறனாளிப் பெண் சீமா என்பவர் அந்தச் சிறுமியை துன்புறுத்தி வருவதாகவும் புகார் வந்தது.
பின்னர் நாங்கள் உடனடியாக அவரது இல்லத்தில் சோதனை நடத்தி, குழந்தையை மீட்டு, குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தோம். தற்போது இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
மேலும் அந்தச் சிறுமியின் உடலில் எரித்த காயங்களும், ஆங்காங்கே தையல் போடப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது' என்றார்.