ஹைதராபாத்: மதுக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், பூங்காக்கள் ஆகியவற்றை மீண்டும் திறக்க தெலங்கானா அரசு அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து வெள்ளிக்கிழமை (செப். 25) வெளியான அரசாணையில், "சில நிபந்தனைகளுக்குள்பட்டு மதுக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், சுற்றுலா மதுக்கடைகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுகிறது.
இருப்பினும், மறு உத்தரவு வரும்வரை 'ஏ 4' கடைகளின் அனுமதி அறைகள் (permit rooms of 'A4') மூடப்படும்.
மதுக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், சுற்றுலா மதுக்கடைகள் கோவிட்-19 விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். கூட்டங்கள், இசை நிகழ்ச்சிகள், நடனம் உள்ளிட்டவற்றிற்குத் தடைவிதிக்கப்படும்.
நுழைவாயிலில் வெப்ப பரிசோதனை, சரியான வரிசை முறை (இடைவெளி விட்டு), சுகாதார நிலைமை, கைகளை அடிக்கடி தூய்மைப்படுத்திக்கொள்ள சானிட்டைசர் வழங்குதல் ஆகியவற்றை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மதுக்கூட ஊழியர்கள் மற்றும் குழுவினர் முகக்கவசம் அணிய வேண்டும்.
ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் மதுக்கூடம் வளாகம் முழுமையும் சுத்தம் செய்வதோடு மட்டுமின்றி சுத்திகரிப்பும் (sanitization) செய்ய வேண்டும். ஒரு புதிய வாடிக்கையாளர் இருக்கையில் அமர்வதற்கு முன்பாக அந்த இடத்தை சுத்திகரிப்பு செய்ய வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கிடையில், ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படி, உள்ளாட்சி அமைப்புகள், வனத் துறைக்குச் சொந்தமான பூங்காக்கள் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளின் கீழ் இல்லை என்று தலைமைச் செயலர் சோமேஷ்குமார் தெளிவுபடுத்தினார்.
வனங்களின் முதன்மைத் தலைமைப் பாதுகாவலர், பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி ஆணையர், நகராட்சி ஆணையர்கள் அதற்கேற்ப தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.