சீனா, தென் கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 (கொரோனா வைரஸ்) வேகமாகப் பரவிவருகிறது. இந்நிலையில், சிக்கன் உள்ளிட்ட இறச்சி உணவுகள் உண்டால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவிவருகின்றன. இதன் காரணமாக அவற்றின் விலை ஒரு கிலோவுக்கு 80 ரூபாயிலிருந்து, 40 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதனால் கோழிக்கறி வளர்ப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வதந்திகள் உண்மை இல்லை என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்பாளர்கள் குழு, தெலங்கானா கால்நடை வளர்ப்பாளர்கள் சங்கம், தெலங்கானா கால்நடை சம்மேளனம் ஆகியவை சார்பில் தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று இலவச அசைவ உணவுத் திருவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட தெலங்கானா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி. ராமா ராவ், சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேந்தர், சுங்கவரித் துறை அமைச்சர் ஸ்ரீனிவாச கவுடு, மக்களவை உறுப்பினர் ரன்ஜித் ஆகியோர் சிக்கன், மூட்டை ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட உணவுகளை உண்டனர்.
இதனிடையே பேசிய அமைச்சர்கள், "கொரோனா வைரஸுக்கும், சிக்கனுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. சிக்கன், முட்டை ஆகியவற்றை நாங்கள் தினந்தோறும் உண்டு வருகிறோம்" என்றனர். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு இலவச அசைவ உணவை உண்டு மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க : ஈரானில் கொரோனா: தமிழ்நாடு மீனவர்களை மீட்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!