கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் வேளையில், வைரஸின் அறிகுறிகள் உள்ள சிலர், மருத்துவரின் பரிந்துரையின்றி தாங்களாகவே, சில மருந்துகளை எடுத்து கொள்கின்றனர். இதற்கு பல்வேறு மருந்தகங்களும் உதவி புரிவதுடன், உயிருக்கு ஆபத்தான சில மருந்துப் பொருள்களையும் மருந்துவரின் பரிந்துரையின்றி விற்பனை செய்துவருகின்றன.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம், வடக்கு கோஷமஹாலிலுள்ள தாருஸ்ஸலாமில் செயல்பட்டுவரும் அகர்வால் மருந்தகத்தில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இருமல் மருந்துப் பொருள்களை மருத்துவரின் பரிந்துரையின்றி விற்பனை செய்துவருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் ஆணையர் தலைமையிலான பணிக்குழு, ஹைதராபாத் மத்திய மண்டல காவல்துறையினர், மருந்து ஆய்வாளர் உள்ளிட்டோர் அந்த மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, முறைகேடாக போதை தரும் வகையிலான இருமல் மருந்துகளை குழந்தைகள் உள்பட பலருக்கு மருத்துவரின் அனுமதியின்றி அதிக விற்பனை செய்தது உறுதியானது.
இதைத்தொடர்ந்து மருந்தகத்திலிருந்து 90 பாட்டில்கள் கோடிமேக்ஸ் இருமல் மருந்து, 64 பாட்டில்கள் யு-லிண்டஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவற்றை ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்யவிருப்பதாகத் தெரிவித்தனர். இவ்விகாரம் தொடர்பாக ஜெயந்த் அகர்வால் என்ற நபரையும் காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.