தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில், கரோனா வைரஸால் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கும் பொருட்டு கடந்த இரு மாதங்களைப் போலவே, இந்த மாதமும் அரசு ஊழியர்களுக்கு ஊதியப் பிடித்தம் செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மக்கள் பிரதிநிதிகளுக்கு 75 விழுக்காடு ஊதியமும், இந்திய அளவிலான சேவை அலுவலர்களுக்கு 60 விழுக்காடு ஊதியமும், மாநிலத்திலுள்ள அரசு ஊழியர்களுக்கு 50 விழுக்காடும், ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களுக்கு 10 விழுக்காடும், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் தொகையில் 25 விழுக்காடும் பிடித்தம் செய்யப்படும்.
அதுமட்டுமின்றி, வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் ரூ. 1,500 இம்மாதம் வழங்கப்படாது. ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்பட்டதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இருந்தபோதிலும், மக்களுக்கு வழங்கப்படும் 12 கிலோ இலவச அரிசி தொடர்ந்து வழங்கப்படும் என்றும், பாதுகாப்பு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுவந்த ஓய்வூதியங்களில் எவ்வித மாற்றங்களும் இல்லாமல் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய முதலமைச்சர் சந்திரசேகர ராவ், "தெலங்கானா மாநிலத்திற்கு ஒவ்வொரு மாதமும் 12 ஆயிரம் கோடி ரூபாய் வந்துகொண்டிருந்த வருவாய், கரோனா வைரஸால் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. மத்திய அரசிற்கு செலுத்தம் 982 கோடி ரூபாயை வரியையும் உள்ளடக்கி இம்மாதத்தில் மாநிலத்தின் மொத்த வருவாயே வெரும் 3,100 கோடி ரூபாய் மட்டுமே.
ஊரடங்கில் சில தளர்வுகள் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், அவை மாநில அரசின் வருவாயினை ஈட்ட உதவவில்லை. இந்த குறிப்பிட்ட வருவாயைக்கொண்டே மாநிலத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யவேண்டும். மாநில அரசு ஆண்டு தவறாமல் 37,400 கோடி ரூபாய் கடனை செலுத்தியாகவேண்டும்.
இந்த கடன்களை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசிடம் கோரிக்கைவிடுத்துள்ளோம். ஆனால், இந்த கோரிக்கை மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்காகவும், ஓய்வூதியம் வழங்குவதற்காகவும் 3,000 கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது. மாநிலத்தின் வருவாய் முற்றிலும் சரிந்துள்ள நிலையில், மாநில அரசு சில முடிவுகளை நோக்கி நகர நிர்பந்திக்கப்பட்டுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: 'இரண்டு மாசம் சம்பளம் கொடுத்தோம்... இப்போ முடியல' - கைவிரித்த இண்டிகோ