கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசுகள் திணறிவரும் நிலையில், மத்திய அரசிடம் உதவி கோரியுள்ளன. அதில், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக தெலங்கானா மாநிலம் சார்பாக ஆயிரம் வென்டிலேட்டர்கள் ஒதுக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், மத்திய அரசு வெறும் 50 வென்டிலேட்டர்களை மட்டுமே தெலங்கானாவுக்கு அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அம்மாநிலச் சுகாதாரத் துறை அமைச்சர் ஈட்டலா ராஜேந்திரா பேசுகையில், ''ஆயிரம் வென்டிலேட்டர்கள் கேட்ட நிலையில், 50 வென்டிலேட்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளன. எங்களுக்குத் தேவையானவை பிரதமரின் உத்தரவுப்படி கொல்கத்தாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதுவரை மாநில அரசு சார்பாக கேட்கப்பட்ட மருத்துவ உதவிகள் எவற்றையும் மத்திய அரசு செய்யவில்லை. தெலங்கானா அரசு கரோனா வைரசைக் கட்டுப்படுத்த தவறிவிட்டதாக பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தவறான தகவல்களைப் பரப்பிவருகிறார்'' என்றார்.