தெலங்கான மாநிலம், நர்சபூர் மண்டலத்திலுள்ள சிப்பல்தூர்த்தி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது விவசாய நிலத்திற்கு தடையின்மை சான்றிதழ் (No Objection Certificate- NOC) பெற அப்பகுதியில் இருந்த மேடக் கூடுதல் கலெக்டர் கடாம் நாகேஷ் என்பவரை அணுகியுள்ளார்.
நாகேஷ் அந்த விவசாயிக்கு தடையின்மை சான்றிதழ் தர லஞ்சமாக 1.12 கோடி ரூபாய் கேட்டுள்ளார். அதிலும் 42 லட்சம் ரூபாய் பணமாகவும், மீதம் 72 லட்சத்திற்கு ஐந்து ஏக்கர் நிலத்தை தனக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
இந்நிலையில், அவ்விவசாயி, தனக்கும் நாகேஷுக்கும் நடைபெற்ற உரையாடலைப் பதிவு செய்து, லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு இது தொடர்பாக புகாரளித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத் துறையினரின் வழிகாட்டுதலின்படி விவசாயி அவருக்கு லஞ்சம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை கைது செய்தனர்.
மேலும், அந்த கலெக்டரின் வீடு, அலுவலகம் உள்பட 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.