2019ஆம் ஆண்டின் மழைக்கால சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், ”வருவாய்த் துறையில் உள்ள ஊழலைத் துடைக்க அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பான நடவடிக்கையின்போது, ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், அது அவர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும்" என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கூறியிருந்தார்.
இதையடுத்து, மாநிலத்தில் புதிய வருவாய் சட்டம் அமல்படுத்துவது தொடர்பான பணிகள் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்றுவந்தன. இந்தச் சட்டத்தின் ஒரு பகுதியாக, வி.ஆர்.ஓ. முறையை ரத்துசெய்ய அரசு திட்டமிட்டிருந்தது.
இதற்கிடையில், வி.ஆர்.ஓ. அமைப்புமுறை ரத்துசெய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. வி.ஆர்.ஓ.க்களின் தற்போதைய நிலையை தெளிவுபடுத்துமாறு வருவாய் ஊழியர் சங்க உறுப்பினர்கள் தெலங்கானா அரசாங்கத்தை கேள்வி எழுப்பினர்.
மேலும், வருவாய்த் துறையில் ஊழலைக் கட்டுப்படுத்த வி.ஆர்.ஓ. அமைப்பு முறையை அகற்ற அரசு எடுத்த முடிவு குறித்து மாவட்ட ஆட்சியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்நிலையில், மாநிலத்தில் கிராம வருவாய் அலுவலர்கள் தொடர்பான அனைத்து பதிவுகளையும் சேகரித்து அரசிடம் சமர்ப்பிக்குமாறு தலைமைச் செயலர் சோமேஷ்குமார் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.