கரோனா பரவிவரும் நிலையில் தேர்வு நடத்துவது சாத்தியமில்லை என கூறி 10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்து தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். இதன் படி 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி அடைவதாக தெலங்கானா அமைச்சரவை அறிவித்துள்ளது. இந்த அமைச்சரசைக் கூட்டத்தில் கல்வி அமைச்சர் சபிதா இந்திராரெட்டி, தலைமை செயலர் ஸ்ரீ சோமேஷ் முகார், சிறப்பு தலைமை செயலாளர் (கல்வி) சித்ரா ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மொத்தம் ஆறு பாடப்பிரிவுகளுக்கு 11 தேர்வுகள் வீதம் நடைபெறவிருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இதில் கரோனா நெருக்கடிக்கு முன்னர் இரண்டு தேர்வுகள் நிறைவடைந்தன. இந்நிலையில் முதலமைச்சர் இதுவரை நடந்த காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்களை கணக்கிட்டு பள்ளி தேர்வுகளின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு கிரேடு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, 5 லட்சத்து 34 ஆயிரத்து 903 மாணவர்கள் தேர்வில்லாமல் அடுத்த வகுப்புக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, தமிழ்நாட்டில் ஜூன்.15 ஆம் தேதி நடைபெறவுள்ள 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை இரண்டு மாதத்திற்குத் ஒத்தி வைக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஜூன் 11-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.