தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் டோலி சௌகி என்னும் பகுதியில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது மாற்றுத் திறனாளி ஒருவர் தனது கையில் குறிப்பாணை (மெமோ) ஒன்று வைத்து சாலையில் நின்றுகொண்டிருந்ததைக் கவனித்தார்.
அப்போது உடனே வாகனத்தை நிறுத்தி அந்த நபரிடம் சென்று அவரது பிரச்னை குறித்து விசாரித்தார். இதையடுத்து தன் பெயர் முகமது சலீம் எனத் தெரிவித்த அந்நபர், தான் ஒரு ஓட்டுநர் எனவும் கடந்த ஒன்பது ஆண்டுகளாக உடல் குறைபாட்டால் அவதிப்பட்டுவருவதாகத் தெரிவித்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கட்டடத்திலிருந்து கீழே விழுந்ததால் கால் முறிந்ததாகக் கூறினார். இதையடுத்து தனது மகனின் உடல்நிலையும் சரியில்லை என்றும் தனக்குச் சொந்தமாக வீடு இல்லை என்றும் கூறினார்.
அப்போது உடனடியாக ஹைதராபாத் மாவட்ட ஆட்சியர் ஸ்வேதா மோஹந்தியை தொடர்புகொண்டு சலீமுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்கவும், இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீட்டை ஒதுக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து சலீமின் வீட்டிற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர், விசாரணை மேற்கொண்டு ஓய்வூதியம், இரண்டு படுக்கையறை கொண்ட வீடு வழங்க அனுமதியளித்தார்.
சலீமுடைய மருத்துவச் சிகிச்சைக்கான செலவுகள், அவரது மகனுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து பணம் ஆகியவை வழங்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: கட்டடத் தொழிலாளிகள் மீது சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி!