வேளாண்மைத் துறை அமைச்சர், உயர் அலுவலர்களுடன் தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் ஆய்வு கூட்டத்தை நடத்தினார். அப்போது பேசிய அவர், "தெலுங்கானா மாநிலத்தின் வாழ்க்கை விவசாயத்துடன் தொடர்புடையது. தெலங்கானாவில் சுமார் 60 முதல் 65 லட்சம் விவசாயிகள் உள்ளனர். அவர்களைத் தவிர மேலும் பலர் விவசாயத்தை நம்பியுள்ளனர்.
மாநிலத்தில் நெல் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்துவருவதால் விரைவில் தெலங்கானா இந்தியாவின் நெற்களஞ்சியமாக மாறும். அறுவடையை அதிகரிக்கவும் விவசாயப் பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்யவும் விரிவான ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன திட்டங்களுக்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளதால், வரும் காலங்களில் கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளிலிருந்து கூடுதலாக சுமார் 1,300 டி.எம்.சி. நீரைப் பயன்படுத்த முடியும். ககாட்டியா திட்டத்தாலும் 24 மணி நேர இலவச மின்சார திட்டத்தாலும் நீர்ப்பாசனத்திற்குக் கூடுதல் நீர் கிடைக்கிறது.
அரசின் திட்டங்களால் 1.45 கோடி ஏக்கர் நிலத்தில் இரண்டு பயிர்களும், 10 லட்சம் ஏக்கர் நிலத்தில் மூன்று பயிர்களும் அறுவடை செய்யப்படும். வரும் காலங்களில் விளைச்சல் இரட்டிப்பாகும்.
ஒரே நேரத்தில் அனைத்து விவசாயிகளும் ஒரே பயிரை பயிரிடக்கூடாது. சந்தைகளில் எந்த பயிருக்கு அதிக தேவை உள்ளதோ அதையே விவசாயிகள் பயிர் செய்ய வேண்டும். எந்தப் பகுதியில் எந்தப் பயிரை வளர்க்கலாம் என்பது குறித்து விவசாயத் துறை பரிந்துரைக்க வேண்டும்.
விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜூன் மாதத்திற்குத் தேவையான உரங்கள் தயாராக உள்ளன. எனவே, விவசாயிகள் அவற்றை மே மாதத்தில் வாங்கிக்கொள்ளலாம். விவசாயிகள் உரக் கடைகளில் ஒரே நேரத்தில் கூடக்கூடாது, தட்டுப்பாடு ஏற்படாது என்பதால் தேவையான அளவு உரத்தை மட்டுமே வாங்க வேண்டும் "என்றார்.
மேலும், பயிர்களின் உற்பத்தி அதிகரிப்பதால் கூடுதலாக 40 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கூடங்களைக் கட்டவும், 2500 உழவர் குழுக்களை அமைக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு சந்திரசேகர ராவ் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 2 மாதங்களுக்குச் சம்பளம் இல்லை - ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பால் அதிர்ச்சி!