மேலும், விடுதிகளில் தங்கி இருப்போரை வெளியேற அழுத்தம் கொடுக்கும் நிர்வாகங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என தெலங்கானா காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவிட்- 19 பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெலங்கானா அரசு எடுக்கும் முடிவோடு இணங்கி செயலாற்றுமாறு விடுதி நிர்வாகிகளுக்கு தெலங்கானா காவல்துறையும், சுகாதாரத் துறையும் அழைப்பு விடுத்துள்ளன.
இது தொடர்பாக ஊடகங்களை சந்தித்த தெலங்கானா காவல்துறை தலைவர் மகேந்தர் ரெட்டி, “ கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுக்க 21 நாள்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஒன்றுகூட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு உத்தரவிற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாநிலத்தின் எந்தவொரு பகுதியிலிருந்தும் எவரும் தேவையின்றி நடமாட அனுமதிக்க முடியாது. பொது சுகாதார பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மேலதிக உத்தரவுகள் வரும் வரை மாநிலம் முழுவதிலுமுள்ள விடுதிகளில் தங்கி இருக்கும் வெளி மாநில மக்களை வெளியேற்ற அனுமதிக்க முடியாது.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் அனைத்து விடுதிகளும் தங்கள் விடுதிகளில் தங்கி இருப்போரை வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன. விடுதிகளில் தங்கி இருப்போருக்கு இடையூறு செய்யாமல் தொடர்ந்து தங்குவதற்கு இடமளிக்க வேண்டுமென விடுதி நிர்வாகங்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.
ஹைதராபாத் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளியேறி தமது மாநிலங்களுக்கு செல்ல அனுமதி கேட்டு ”பாஸ்” பெறுவதற்கான முறையீடுகள் அதிகரித்து வருகிறது. இதனால், பெரும் மக்கள் கூடுகை எல்லையோரங்களில் அமைந்திருக்கும் சோதனை சாவடிகளில் ஏற்படுகின்றன.
இதன் காரணமாக இதுவரை வழங்கப்பட்ட 3000-க்கும் மேற்பட்ட பாஸ்களை ரத்து செய்வதாக அறிவிக்கிறோம். காவல்துறை வழங்கிய அனுமதிகள் இனி செல்லுபடியாகாது.” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : தெலங்கானா, ஆந்திராவில் உகாதி கொண்டாட்டம்