கடந்த சில நாட்களாக என் மகன் எதையோ உட்கொண்டுவிட்டு தினமும் 10 மணி நேரத்துக்கு மேல் உறங்குகிறான். அதுபற்றி கேட்டால், எதுவும் தெரியாத அப்பாவி போல் நடிக்கிறான். இந்தப் பழக்கம் அவனுக்கு இதற்கு முன் இருந்தது கிடையாது என ரட்சகொண்டா சிறப்பு பிரிவினரிடம் ஒரு தந்தை புகாரளித்தார்.
அதேபோல், பள்ளி மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராமில் அந்நிய நபர்களுடன் பழகுவதையும், கஞ்சாவுக்கு அடிமையாகி இருப்பதையும் அவரது தாயார் கண்டறிந்துள்ளார்.
ஊரடங்குக்கு முன்பு வரை இயல்பாக இருந்த 18 வயது இளைஞர் ஒருவர், ஊரடங்குக்கு பின் விநோதமாக நடந்துகொள்வதையும், கஞ்சாவுக்கு அடிமையாகியிருப்பதையும் அறிந்த அவரது குடும்பத்தினர், அவரை உள நோய் மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த ஊரடங்கு சமயத்தில் இதுபோல பல நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இது பெற்றோர்களை கலக்கமடையச் செய்துள்ளது. ஊரடங்கில் அனைவரும் வீட்டுக்குள் முடங்கியிருப்பதால், பெற்றோருக்கு தன் குழந்தைகளின் நல்ல பக்கமும், தீய பக்கமும் தெளிவாக தெரியத் தொடங்கியுள்ளன. உள நோய் மருத்துவர்களை சந்தித்த சில பெற்றோர்கள், குழந்தையின் பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்பட முக்கியக் காரணம் இந்த ஊரடங்கு என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறுகின்றனர். மருத்துவ நிபுணர்களோ இதுபோன்ற சூழலில் இப்படியான நிகழ்வுகள் இயல்புதான் என்கின்றனர். 17 முதல் 21 வயதுடைய இளைஞர்களே இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், குழந்தைகளின் உளவியல் சிக்கலை சரிசெய்ய பெற்றோர்களுக்கு இந்த ஊரடங்கு சரியான நேரம் எனவும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல் வாரத்துக்குப் பிறகே குழந்தைகளின் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. நாட்கள் செல்லச் செல்ல இளைஞர்களின் நிலை மோசமாக மாறியிருக்கிறது. கஞ்சா, சிகரெட்டுக்கு அடிமையான இளைஞர்கள் வீட்டிலேயே அந்தப் பழக்கத்தை தொடர ஆரம்பித்துவிட்டனர். போர்ன் படங்களுக்கு அடிமையான இளைஞர்கள், தங்களை தனியாக விடும்படி குடும்ப உறுப்பினர்களை கடிந்துகொள்கின்றனர். வெறும் 20 சதவிகித இளைஞர்கள் மட்டுமே ஊரடங்கால் இந்தப் பழக்கங்களுக்கு ஆளானவர்கள், மீதி 80 சதவிகித இளைஞர்களுக்கு முன்பிருந்தே இப்பழக்கங்கள் இருப்பது தெரியவந்தது.
உள நோய் மருத்துவர் கல்யாண் சக்ரவர்த்தி இது குறித்து, இளைஞர்களை நெறிப்படுத்த இதுவே சரியான நேரம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கனிவுடன் கையாள வேண்டும். குழந்தைகளிடம் இந்த விவகாரத்தில் மூர்க்கமாக நடந்துகொள்வது நிலைமையை மோசமானதாக மாற்றக்கூடும். எனவே அவர்களுடன் பெற்றோர்கள் நெருக்கமாக இருக்க வேண்டும். நிலைமை கைமீறிப் போகும்போது, துறைசார்ந்த அறிஞர்களிடம் பெற்றோர்கள் ஆலோசனை கேட்பது அவசியம் என்கிறார்.