குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள பிரஹலாத் நகர் கார்டன் பகுதியில், கார்கள் திருடு போவது குறித்து தங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின்படி குற்றப் பிரிவு காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியே வந்த ஸ்கார்பியோ காரை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்ததில் அந்தக் கார் திருடப்பட்டிருந்தது உறுதியானது. மேலும், காரை ஓட்டி வந்த சத்யேந்திர சிங் ஏற்கனவே கார் திருட்டு வழக்கில் இரண்டு முறை சிறை சென்று வந்ததும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து உடனடியாக அவரைக் கைது செய்த காவல் துறையினர், தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அதில், அந்நபருக்கு நான்கு மாநில குற்றவாளிகளுடன் தொடர்பு உள்ளது தெரிய வந்தது. அந்நபர் சர்வீஸ் ஸ்டேஷனுக்கு வரும் வாகனங்களின் சாவியை முதலில் ஸ்கேன் செய்து விடுவார். அதனைத் தொடர்ந்து, ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு போலியான சாவிகளை உருவாக்கியுள்ளார்.
அதனிடையே, போலியான சாவி தயாரித்த கார் எங்கு உள்ளது என்பதைக் கண்டறிய ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார். தொடர்ந்து, காரின் இருப்பிடத்தை அறிந்து எளிதாக தாங்கள் தயாரித்த சாவிகள் மூலம் கார்களை திருடி வந்துள்ளார்.
அதுமட்டுமின்றி திருடிய காருடன் உடனடியாக வெளியில் சுற்றாமல் பொது இடத்தில் அந்தக் காரை சுமார் 20 மணி நேரம் நிறுத்தி வைத்துவிட்டு, பின்னர், ஆன்லைன் மூலம் ஓட்டுநரை புக்கிங் செய்து காரை தனது இருப்பிடத்திற்கு கொண்டு வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.
மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "அகமதாபாத், காந்திநகர், ராஜஸ்தான், பெங்களூரு, காசியாபாத், சென்னை ஆகிய நகரங்களிலிருந்து ஆறு ஸ்கார்பியோ கார்களை திருடியுள்ளதகாவும், ஜாம்நகர், டியூவிலிருந்து பார்ச்சூனர் காரும், வதோதராவிலிருந்து கியா செல்டோஸ் காரும், பல மாநிலங்களிலிருந்து 12 கார்களும் திருடியதை ஒப்புக்கொண்டார்.
தவிர, அந்நபரிடமிருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சாவி தயாரிக்கும் மின்னணு இயந்திரம், 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஜிபிஎஸ் கருவிகள், இரண்டு வைஃபை டாங்கிள், மூன்று செல்போன்கள், ஐந்து சாவிகள், பவர் பேங்குகள் என மொத்தமாக 18 லட்சம் மதிப்பிலான பொருள்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.