உலக நாடுகளின் கண் முன் நிற்கும் சவாலாக கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்று உள்ளது. இந்த வைரஸின் ஆதி மூலமான சீன நாடு, அதனைப் பரவ விடாமல் தடுக்க திணறி வருகிறது. நேற்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, 1,800க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து உள்ளதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வைரஸ் தொற்றால், சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. சீனாவில் உள்ள முக்கிய நகரமான வூஹானில்தான் கொரோனா வைரஸின் தீவிரம் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகளவில் சுகாதார அவசர நிலை பிரகடன அறிவிப்பை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டது, அனைத்து நாடுகளையும் கலக்கமடையச் செய்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாடுகளில் வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கையாண்டு வருகின்றன. குறிப்பாக, இவ்விவகாரத்தில் இந்தியா துரிதமாகச் செயல்பட்டு வருகிறது.
வெளிநாடுகளிலிருந்து வருபவர்களால் தான் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவுக்குள் நுழைய முக்கிய வழி என்று உணர்ந்த மத்திய அரசு, சர்வதேச விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகளிடம் தீவிர மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னே உள்ளே அனுமதிக்கிறது.
இது தவிர, சீனாவில் உயர்க்கல்வி பயிலும் மாணவர்கள், வேலை நிமிர்த்தமாக அங்கு வசிப்பவர்கள் என, அனைத்து இந்தியர்களையும் மீட்கும் பணியையும், இந்தியா மறக்கவில்லை. அதே சமயம், சுற்றுலாவாக இந்தியா வந்த சீனப் பயணிகளையும், அவர்களின் நாட்டுக்கும் இந்தியா திருப்பி அனுப்பி வருகிறது.
உலகத்திலேயே கொரோனா வைரஸ் தாக்கம் மிக மிகத் தீவிரமாக இருக்கும் சீனாவின் வூஹான் நகர் உள்ளிட்ட நகரங்களில் வசித்து வந்த 645 இந்தியர்களையும், 7 மாலத்தீவு நாட்டைச் சேர்ந்தவர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்ட இந்திய மருத்துவக் குழுவைச் சேர்ந்த மருத்துவரான புலின் குப்தா, நமது ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
அதில், தாங்கள் எவ்வாறு இந்தியர்களை சீனாவிலிருந்து மீட்டோம் என்பது குறித்த சில சுவாரஸ்யத் தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய குப்தா, ”வூஹான் நகரத்திலிருக்கும் இந்தியர்களை மீட்க, பயணம் செய்வதற்கு நான்கு நாள்களுக்கு (ஜனவரி 27ஆம் தேதி) முன்னர்தான் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அங்கு வசிக்கும் மருத்துவ மாணவர்கள், வேலை செய்பவர்கள், சுற்றுலாப் பயணிகளாக வந்தவர்கள் என அனைவரையும் மீட்டுமாறு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி, 36 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், ஜனவரி 31ஆம் தேதி இந்தியாவிலிருந்து விமானத்தில் புறப்பட்டோம். ஆரம்பத்தில் 200 பேரை மீட்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. பின்னர், 350க்கும் மேற்பட்ட மக்களை மீட்டு வர வேண்டும் எனத் தகவல் அளிக்கப்பட்டது.
இதன் மூலம் எங்கள் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தோம். மீட்புப் பணிக்காக முகமூடி, மருந்துகள் ஆகியவற்றை எடுத்துச் சென்றோம். நாங்கள் சென்ற விமானம் சீனாவில் தரையிறங்கியபோது, மக்கள் நடமாட்டமோ, வாகனங்களோ சாலையில் காணப்படவே இல்லை.
ஏனெனில், பொது மக்கள் நடமாட நகரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தடை செய்யப்பட்டிருந்தன. சீனாவிலுள்ள இந்திய தூதரகம், 650 இந்தியர்களையும் 7 மாலத்தீவு நாட்டைச் சேர்ந்தவர்களையும் நகரிலிருந்து மீட்டு தூதரகத்திற்கு அழைத்து வந்தது.
அவர்கள் அழைத்து வந்த பிறகு ஒவ்வொருவரையும் தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தினோம். பின்னர், அனைவரையும் நாங்கள் சென்ற விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்து வந்தோம். அதில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கத்தின் முக்கிய அறிகுறிகள் இருந்ததால், விமான நிலையத்திலேயே அவர்களைத் தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.
மீட்புப் பணி நிறைவடைய இரு நாள்கள் ஆனது என்றும், தாங்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு 14 நாள்கள் தங்களுடைய வீட்டுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், அந்த நாள்களில் குடும்பம், குழந்தைகளிடம் இருந்தும் விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது என்றார்.
சீனாவிலிருந்து இந்தியர்களைப் பத்திரமாக மீட்ட மருத்துவக் குழுவைப் பாராட்டி, பிரதமர் நரேந்திர மோடி அளித்த பாராட்டுக் கடிதத்தை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மருத்துவக் குழுவினரிடம் வழங்கினார்.
வெளிநாடுகளில் இருந்து 2,996 விமானங்களில் 3 லட்சத்து 21 ஆயிரத்து 375 பேரும், 125 கப்பல்களில் 6,387 பேரும் இந்தியா வந்தடைந்ததாக மத்திய சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், 2,571 பேரிடம் ரத்த மாதிரிகளை 15 ஆய்வகத்தில் வைத்து பரிசோதித்ததில், மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸின் தாக்கம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இம்மூவரில், கேரளாவைச் சேர்ந்த இருவர் சிகிச்சை பெற்று வீட்டுக்குத் திரும்பி விட்டதாகவும், எஞ்சியுள்ள ஒருவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் சுகாதாரத் துறை கூறியுள்ளது.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ்: திருச்சியில் ஒருவர் கண்காணிப்பு