நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்பட்டது. சட்டமன்றத் தேர்தலில் 23 இடங்களையும் மக்களவைத் தேர்தலில் மூன்று இடங்களையும் மட்டுமே பெற்று தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியடைந்தது.
இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஒய்.எஸ். சௌத்ரி, ரமேஷ், வெங்கடேஷ், ஜிஎம் ராவ் ஆகிய நான்கு ராஜ்ய சாபா எம்பிகள் நேற்று திடீரென்று பாஜகவில் இணைந்தனர். மேலும் அவர்கள் தெலுங்கு தேசம் கட்சியைக் கலைத்துவிட்டு பாஜகாவுடன் இணைக்க வேண்டும், அப்படி செய்வது தெலுங்கு தேசம் கட்சிக்கும் சந்திரபாபு நாயுடுவிற்கும் நன்மை தரும் என்று தீர்மானமும் நிறைவேற்றினர்.
இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் காலா ஜெயதேவ் கூறுகையில், "பாஜகவில் இணைந்த நான்கு எம்பிகள் நிறைவேற்றிய தீர்மாங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்றத் தலைவரான நான் அதில் கையெழுத்தும் இடவில்லை. எனவே தனிச்சையாக செயல்பட்ட அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்
மேலும், "கட்சியை கலைப்பது சந்திரபாபு நாயுடுவிற்கு நன்மை என்ற ரீதியிலும் அவதுறு பரப்பி வருகின்றனர். இது முற்றலும் தவறான தகவல். இதற்கும் சந்திரபாபு நாயுடுவிற்கும் எந்த தொடர்புமில்லை" என்று தெரிவித்தார்.