அயோத்தியில் மசூதி கட்ட அறக்கட்டளை அமைக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்தார். அவரின் கருத்துக்கு காங்கிரஸ் மூத்தத் தலைவர் தாரிக் அன்வர் ஆதரவு தெரிவித்தார்.
இது குறித்து தாரிக் அன்வர் கூறுகையில், “சரத் பவாரின் கருத்து மிக முக்கியமானது என நான் கருதுகிறேன். அரசு இதனைச் செய்ய வேண்டும். அப்போது நாட்டின் மீது உலகளவில் நல்ல பிம்பம் விழும்” என்றார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டிக்கொள்ள உச்ச நீதிமன்றம் ராம் லல்லாவுக்கு ஒருமனதாக ஆதரவு அளித்தது. இதையடுத்து அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டது. ஸ்ரீ ராம ஜென்ம பூமி ஷேத்ரா என்று அந்த அறக்கட்டளைக்கு பெயரிடப்பட்டுள்ளது.
நீதிமன்றம் தனது தீர்ப்பில் அயோத்தியில் மசூதி கட்டிக்கொள்ள ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து உத்தரப் பிரதேச அரசு அயோத்தியில் ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில் அயோத்தியில் மசூதி கட்ட அறக்கட்டளை அமைக்குமாறு சரத் பவார் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ட்ரம்ப் அதிருப்தி: இந்தியா விளக்கம்