மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தொழிலாளர்களாக பணிபுரிந்துவருகின்றனர். இவர்கள் மத்திய அரசு அறிவித்துள்ள முழு அடைப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது வேலை இழந்துள்ள நிலையில், கையில் பணமின்றி கஷ்டப்படுகின்றனர். இந்தநிலையில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு மாநில அரசை வலியுறுத்திவருகின்றனர்.
இதற்கிடையில் இன்று சுமார் 450க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரத்னகிரி சால்வி நிறுத்தத்திலிருந்து ஊர்வலமாக சென்றனர். இதில் பிற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டனர். இந்த ஊர்வலத்தை காவலர்கள் லேசான தடியடி நடத்தினார்கள். மேலும் ஊர்வலத்தில் கலந்துகொண்ட சிலரை வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து அகற்றினர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வையுங்கள் என கோரிக்கை விடுத்தனர்.
அவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கணேஷ் இங்கே மற்றும் நகர காவல் ஆய்வாளர் அனில் லாட் ஆகியோர் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். புலம்பெயர்ந்த தமிழர்கள் சொந்த ஊருக்க அனுப்பி வைக்கக் கோரி ஊர்வலம் நடத்த முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: 698 இந்தியர்களுடன் கொச்சிக்கு விரையும் ஜலாஷ்வா கப்பல்!